டெல்லி: அதானி குழுமத்தை அடுத்து ட்விட்டரின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான ஜேக் டோர்சி நிறுவனம் முறைகேடு செய்திருப்பதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியுள்ளது. ஜேக் டோர்சி நடத்தி வரும் பிளாக் எனும் டிஜிட்டல் பேமென்ட் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு முதல் நியூயார்க் பங்கு சந்தையில் பொதுத்துறை நிறுவனமாக வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பணம் செலுத்துவதற்கு பிளாக் தளத்தை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டியதாக பிளாக் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் போலி கணக்குகள் தொடங்க வாடிக்கையாளர்களை பிளாக் நிறுவனம் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் விதிகளை பின்பற்றாமல் பிளாக் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற்றியதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியுள்ளது. பிளாக் புலம் பண பரிவர்த்தனை செய்வதற்கு பதில் சிறிய பதிவு நிறுவனங்கள் வழியாக பரிவர்த்தனை நடத்தியதாகவும், 8,200 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்துள்ளதாகவும் ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை தொடர்ந்து ஜேக் டோர்சியின் பிளாக் நிறுவன பங்குகள் விலை 21 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.