தமிழக சட்டசபையில், நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளதாவது:-
“தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 56 சதவீதத்தில் விவசாயிகளுக்காக இடம் பெற்றிருந்தது. ஆனால் நிதிநிலை அறிக்கையில் அங்கேயும், இங்கேயுமாக உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அளித்த நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ஆயிரம் ரூபாயும் எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதில் அளித்ததாவது, தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் நெல்லுக்கும், கரும்புக்கும் விலை உயர்த்தி வழங்கப்படும். அந்த நம்பிக்கை விவசாயிகளுக்கு உள்ளது என்றுத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய கே.பி. முனுசாமி, “தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் என்று அறிவித்துவிட்டு, தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் தான் என்று சொன்னால் வாக்களித்த பெண்கள் திமுக அரசை நம்புவார்களா? அதேபோல், நூறு நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக மாற்றப்படும் என்று அறிவித்ததை எப்போது செயல்படுத்துவீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்ததாவது, ’’நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இருந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால் நூறு நாள் வேலை 150 நாட்களாக உயர்த்தப்பட்டிருக்கும்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாள் வேலை திட்டத்திற்கு 281 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கிடையே ஒன்றிய அரசின் நிதியை பொருட்படுத்தாமல் 40 கோடி மனிதத் திறன் நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றுத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விவாதத்தை முடிப்பதற்கு சபாநாயகர் அறிவுறுத்திய நிலையில் கே.பி.முனுசாமி, “உணர்ச்சி பூர்வமாக பேசிக் கொண்டிருக்கிறேன். அதிமுகவும் திமுகவும் அடித்துக் கொண்டிருந்தால் தான் நமக்குள் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சியாக இருக்க முடியும்” என்று பேசியுள்ளார்.