அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்த வழக்குகளில் எழுத்துப்பூர்வமான வாதங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி. டி. பிரபாகர் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விடுமுறை நாளான புதன்கிழமை முழுவதும் விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்து தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், ஓ.பி.எஸ்., மற்றும் அவரது அணியினரின் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன. கடந்த புதன்கிழமை நடைபெற்ற வாதங்களை தொகுத்து எழுத்துப்பூர்வ வாதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து நிலுவையில் இருக்கும் மூல வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என இரு நீதிபதிகள் அமர்வு, உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிப்பது, அதற்கு முரணானது என எழுத்துப்பூர்வ வாதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த எழுத்துப்பூர்வமான வாதங்கள் தொடர்பான ஆவணங்களை அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கும் வழங்கிய பின்பு, நீதிபதி குமரேஷ் பாபுவின் நீதிமன்ற அதிகாரியிடமும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM