காலிஸ்தான் தனி நாடு கோரும் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள். போலீஸாரின் இந்த நடவடிக்கையால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள்.
லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், அங்கு இந்தியாவின் தேசியக்கொடியை இறக்கிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்ற முயன்று அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேபோல, அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவாக, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்பாகவும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்கான முயற்சியில் கடந்த வாரம் போலீஸார் இறங்கினர். ஆனால், காரில் பயணம் செய்துகொண்டிருந்த அம்ரித்பால், போலீஸிடமிருந்து தப்புவதற்காக காரைவிட்டு இறங்கி பைக்கில் தப்பிவிட்டார் என்று போலீஸ் கூறுகிறது. இன்னொருபுறம், அம்ரித்பாலை காவல்துறையினர் பிடித்துவிட்டதாகக் கூறும் அவருடைய ஆதரவாளர்கள், நீதிமன்றத்தில் அம்ரித்பாலை ஆஜர்ப்படுத்த வேண்டுமென்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, பஞ்சாப் மாநிலத்தில் 80,000 போலீஸார் இருக்கும்போது, அவர்களை மீறி அந்த நபர் எப்படி தப்பிச்சென்றார் என்று கேள்வி எழுப்பினார். அப்படியென்றால், உளவுத்துறையின் ஒட்டுமொத்த தோல்விதான் அதற்குக் காரணம் என்று மாநில அரசை நீதிபதி சாடினார்.
நீதிமன்றத்தின் விமர்சனத்துக்குப் பிறகு, தேடுதல் நடவடிக்கையை போலீஸார் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். ஆறு விதமான தோற்றங்களில் இருக்கும் அம்ரித்பால் சிங்கின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டிருக்கிறார்கள். மாநிலத்தின் அமைதிக்கும், நல்லிணத்துக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 154 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
அம்ரித்பால் மீதும், அவருடைய ஆதரவாளர்கள் சிலர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. கைது செய்யப்பட்ட அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் சிலர், பாதுகாப்பு காரணங்களுக்காக அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அம்ரித்பால் சிங்கின் சொந்த கிராமமான ஜல்லுபூரில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அம்ஜலந்தர் பகுதியில் ஆளில்லாமல் நிறுத்தப்பட்டிருந்த இசுசு கார் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். அந்த காரிலிருந்து கைத்துப்பாக்கி, வாள், வாக்கி டாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், காலிஸ்தான் இயக்கத்தை ஆரம்பித்து வன்முறைகளில் ஈடுபட்ட பிந்த்ரன்வாலே, ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார்.
அதுபோன்ற ஒரு சூழல் உருவாகுமோ என்ற அச்சம் பஞ்சாப் மக்களிடையே தற்போது உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில், மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் போலீஸாரும் துணை ராணுவப்படையினரும் அணிவகுப்பு நடத்தினர்.
‘பஞ்சாப்பில் பயங்கரவாதச் சூழலை ஏற்படுத்த வேண்டாம்’ என்று மத்திய, மாநில அரசுகளை ‘அகல் தக்த்’ என்ற சீக்கிய அமைப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து விவாதிப்பதற்கு அகல் தக்த் அமைப்பு பிற சீக்கிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தியிருக்கிறது. அதன்படி, சீக்கிய அமைப்புகளின் உயர்மட்டக் கூட்டம் மார்ச் 27-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அஜ்னாலா காவல்நிலையம் மீதும் பிப்ரவரி 23-ம் தேதி அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு, பஞ்சாப் சூழலை மத்திய அரசு உன்னிப்பாகப் பார்க்கத் தொடங்கியது. டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் சிங் மான்.
தேசத்துக்கு எதிராகச் செயல்படும் எந்த சக்தியையும் அனுமதிக்க மாட்டோம் என்று பக்வந்த் சிங் மான் கூறியிருக்கிறார். பிரிவினைவாத செயல்பாடுகளுக்கு எதிராக மத்திய அரசும் மாநில அரசும் கைகோத்து களமிறங்கியிருக்கின்றன. வன்முறை ஏதுமின்றி அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே பஞ்சாப் மக்களின் விருப்பம்.!