‘அன்பு காட்டிவிட்டால் நான் அடிமையாகி விடுவேன்; இதை அனைவரும் என்னிடம் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும்; அனைவரும் என்னிடம் அன்பு காட்டிட வேண்டும்’ என்று நடிகர் சிம்பு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி உள்ள ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சிலம்பரசன், ஏ.ஜி.ஆர்.எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘பத்து தல’. இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜய் அருணாச்சலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி, மது குருசாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிம்பு உள்ளிட்ட ‘பத்து தல’ திரைப்பட குழுவினர் சென்னை கமலா திரையரங்குகளில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது சிம்பு பேசுகையில், “எனக்கு சினிமாவில் சொல்லி கொடுப்பதற்கு சிலர் இருந்தார்கள். ஆனால் சினிமாவில் தானாகவே நடிக்க கற்றுக் கொண்டவர் மது. விரைவில் அவர் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழியிலும் நடித்து அசத்துவார் என நம்புகிறேன். ட்ரெய்லருக்கு ஒரு சில நல்ல நல்ல காட்சிகளை பயன்படுத்துவார்கள், ஆனால் இந்த படத்தில் இருப்பது அனைத்துமே நல்ல காட்சிகள் தான்.
சிம்புவிற்கு அதிக காட்சி, கௌதம் கார்த்திக்கு குறைந்த காட்சி கொடுத்துள்ளதாக சொல்லி இருந்தார்கள், அப்படி ஏதுமில்லை. இந்த படத்தில் அனைவருக்கும் எந்தமாதிரியான கதாபாத்திரமோ, அதற்கு ஏற்றது போல் அதற்கான இடம் தரப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு நான் ஒப்புக்கொண்டதற்கான காரணம் கௌதம் கார்த்திக் தான். ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன் என்னவேனாலும் பேசிவிடலாம், ஆனால் வெளிவந்ததற்கு பிறகு எதுவும் பேசுவதற்கு இடம் கொடுக்க கூடாது என நினைக்கிறேன். தயாரித்து வெளியே கொண்டு செல்லும் வரையிலும், ‘பத்து தல’ திரைப்படம் எந்த பேச்சும் இல்லாமல் வருகிறது என்றால், அதற்கு காரணம் தயாரிப்பாளர் தான்.
அன்பு காட்டிவிட்டால் நான் அடிமையாகி விடுவேன். இதை அனைவரும் என்னிடம் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும். அனைவரும் என்னிடம் அன்பு காட்டிட வேண்டும்.
ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் எனக்கு சிறப்பாக இசையமைத்துக் கொடுப்பார். அதேபோல் இந்தப் படத்திலும் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார், அந்தப் பாடல்கள் எப்போது வெளியாகும் என நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். சிறு வயதிலும் சரி, இப்போதும் சரி… ஊடக நண்பர்கள் என்னிடத்தில் அதிக அளவிலேயே அன்பைக் கொடுத்து வருகிறீர்கள்; உங்கள் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கட்டும்” என்றார். இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை ஆயிஷா உள்பட திரைப்பட குழுவினர் கலந்து கொண்டனர்.