அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது எம்.பி. பதவியை மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி?” எனப் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜகவைச் சேர்ந்த குஜராத் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹெ.ஹெவர்மா, இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்தார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன்படி ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என நீதிபதி அறிவித்தார். மேலும் அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கியது.
நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்குப் பிறகு ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய மதம் அகிம்சை மற்றும் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. உண்மை என் கடவுள். அகிம்சை அதை அடைவதற்கான வழிமுறை” என்ற மகாத்மா காந்தியின் கருத்தைப் பதிவிட்டிருந்தார். மேலும், ராகுலுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ராகுல் எம்.பி. பதவி தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தனர். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்குகளில் 2 அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றால் அவர்களது பதவியை பறிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடமுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 8 (3)ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM