புதுடெல்லி: “இப்போதும் நான் உங்கள் முதுகில் எனது அழுக்கைத் துடைத்ததாகத்தானே சொல்வார்கள்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தது சூரத் நீதிமன்றம். இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு வந்தார். அவர், நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் நடந்த காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கார்கேவிடம் வருத்தம்: கூட்டம் முடிந்து வெளியே வரும்போது படியில் இறங்க சிரமப்பட்ட கார்கேவிற்கு அவரின் பின்னால் வந்த ராகுல் காந்தி, கார்கேவின் கையைப் பிடித்து இறங்க உதவி செய்தார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி, “நான் இப்போது உங்களைத் தொட்டிருக்கிறேன். அவர்கள் இதையும், உங்களுடைய முதுகில் நான் அழுக்கைத் துடைத்ததாகத்தானே சொல்வார்கள்?. அன்றும் உங்களுக்கு உதவி செய்ததை, உங்கள் மீது அழுக்கைத் துடைத்ததாகவே கூறினார்கள்” என்று கார்கேவிடம் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்து, பாஜக அவர் மீது வைத்திருந்த குற்றச்சாட்டின் வெளிப்பாடாகவே அமைந்திருந்தது.
முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியின் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், கார்கேவின் முதுகை ராகுல் காந்தி தடவும் காட்சி இடம்பெற்றிருந்தது. மேலும், மூத்த தலைவர் கார்கேவை ராகுல் காந்தி தனது “டிஸ்ஷ் பேப்பராக” பயன்படுத்துவதாக அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, “எல்லாத் திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான பெயராக அமைந்திருக்கிறது” என்று ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் கீழ், தகுதிநீக்க பிரச்சினையை ராகுல் காந்தி எதிர்கொண்டுள்ளார். தனது கருத்துக்காக ராகுல் காந்தி இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இந்த நிலையில், ராகுல் காந்தியின் கருத்து தனிப்பட்ட யாரையும் தாக்கிக் கூறப்படவில்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய அரசியல் சண்டை: ராகுல் காந்தி சமீபத்தில் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசிய கருத்துக்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாஜக வரவேற்றுள்ளது. மேலும், மோடி என்ற பெயரைப் பயன்படுத்தி வரும் “தெலி” சமூகத்தினரை ராகுல் காந்தி அவமானப்படுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா “2019-ம் ஆண்டு ராகுல் காந்தி கூறிய கருத்து அவரின் பரிதாபகரமான, சாதிய மனநிலையை காட்டுகிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஜெ.பி.நட்டா இந்த விஷயத்தில் சாதி அரசியல் செய்வதாக தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் “நீரவ் மோடி, லலித் மோடியைதான் நட்டா காப்பாற்றியிருக்கிறார். இந்த உண்மை வெளிவர காத்திருந்தது. இப்போது அது நடந்திருக்கிறது. உங்களுடைய நேர்மைக்கு நன்றி நட்டா ஜி.. அந்த நேர்மையை அதானியிடமும் காட்டுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.