இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் பின்னணியில் ஒமிக்ரான் வகையை சேர்ந்த XBB.1.16 வைரஸின் தாக்கம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கு மிக மோசமான நிலையோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. கடந்த மூன்று மாதங்களில் 344 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
ஒமிக்ரான் வகை மாதிரி
அதன் அடிப்படையில் மகாராஷ்டிராவில் 105, தெலங்கானாவில் 93, கர்நாடகாவில் 57, குஜராத்தில் 54, டெல்லியில் 19 என ஒமிக்ரான் வகை புதிய மாதிரி வைரஸ் பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் தீவிரம் பெரிதாக இல்லை என்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஒருவாரத்தில் மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு சற்றே அதிகமாக இருந்துள்ளது.
புதிய பாதிப்புகள்
நேற்று மட்டும் புதிதாக 1,249 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 7,927ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, கொரோனா பரவலால் பலி எண்ணிக்கை 5,30,818ஐ எட்டியுள்ளது. இதில் கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நேற்று உயிரிழந்த தலா ஒருவர் அடங்குவர்.
பாசிடிவ் விகிதம்
தினசரி பாசிடிவ் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. வாராந்திர பாசிடிவ் 1.14 சதவீதமாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது 4.47 கோடியை தாண்டிவிட்டது. இதில் குணமடைந்த நபர்கள் 4.41 கோடி பேர் ஆவர். தற்போதைய சூழலில் மொத்த பாதிப்புகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் 0.02 சதவீதம் மட்டுமே.
பலி எண்ணிக்கை
தேசிய அளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடையும் நபர்களின் விகிதம் 98.79 சதவீதமாக நம்பிக்கையூட்டும் வகையில் காணப்படுகிறது. அதுவே பலி எண்ணிக்கை 1.19 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 92.07 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.05 லட்சம் பரிசோதனைகள் அடங்கும்.
ஊரடங்கு அமலாகுமா?
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவாக்சின், கோவிஷீல்டு என 220.65 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவை இரண்டு டோஸ்களாக போடப்பட்டு பூஸ்டர் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தன. எனவே நிலைமை முழுவதும் கட்டுக்குள் தான் இருப்பதாக மத்திய அரசு தரப்பும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஊரடங்கு அல்லது வேறு ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மாநில அளவில் நிலவும் பாதிப்புகள் அல்லது பரவலை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அரசுகள் உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.