மீண்டும் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை, ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து சுமார் 47 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் பணத்தை இழந்த விரக்தியில் சிலர் கொலை, கொள்ளை, வழிப்பறி, கையாடல் உள்ளிட்ட குற்ற செயல்களிலும் இறங்கியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே பாமக குரல் கொடுத்து போராட்டம் உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், 5 மாதங்களுக்கு மேல் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவந்த ஆளுநர், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ந்தேதி, சட்ட மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
இதனையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி உள்ள தமிழக அரசு இன்று ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.