இலங்கையின் பொருளாதாரம் தற்போது மீளக் கட்டியெழுப்பக்கூடிய நாடாக மாறியுள்ளதாகவும், சர்வதேச சமூகமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் தொடர்பான மூன்றாவது நாளாக இன்று (24) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானத்தினால் எமது நாட்டின் பொருளாதாரம் விரிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்;.
‘சிலர் தங்களுடைய அரசியல் அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்காக பொய் சொல்கிறார்கள், எங்களிடம் சில ஒப்பந்தங்கள் உள்ளன. அதன் கருத்து இந்த நாட்டில் பணவீக்கத்தைக் குறைப்பதாகும். இன்று நாடு தெளிவான வேலைத்திட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
போராட்டத்தின் அழிவு இன்னும் கணக்கிடப்படவில்லை. எவ்வளவு சொத்துக்கள் அழிக்கப்பட்டன? இ.போ.ச பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நடு வீதியில் கொலை செய்யப்பட்டார். 72 வீடுகள் அழிக்கப்பட்டன. இந்த நாட்டு மக்கள் இனியும் அழுத்தங்களுக்கு உள்ளாக வேண்டிய அவசியமில்லை.
அனுபவத்துடன் முன்னோக்கி செல்லும் தலைமைத்துவம் ஒன்று தேவைப்பட்டது. அதனால், நாட்டை மீட்பதற்கான ஒரே வழி ரணில் விக்கிரமசிங்கவே என்று நாங்கள் பரிந்துரைத்தோம். இன்று ஆளுங்கட்சியில் உள்ள அனைவரும் நிபந்தனையின்றி நாட்டின் நலனுக்காக இத்திட்டத்துடன் உள்ளனர்.
அத்துடன், தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகின்றனர். முடிந்தவரை திறமையான, பயிற்றப்பட்ட தொழிலாளர்களை நாம் வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்ப வேண்டும். இதனால் அவர்களது குடும்பங்கள் வலுவடைவதுடன் நாட்டின் பொருளாதாரமும் வலுவடையும் ஏன்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.