உயிரிழந்தவர் உடலுக்கு சுவர் ஏறி குதித்து இறுதி அஞ்சலி… 14 மணி நேரமாக தவித்த குடும்பம்!

ஆலங்குடியில் 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வர பாதை இல்லாததால் 14 மணி நேரத்திற்கு மேலாக அவரது உறவினர்கள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (75). இவர், தனது குடும்பத்தோடு அப்பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர்களது வீட்டிற்குச் செல்லும் பாதையை அருகே வசிப்பவர்கள் காம்பவுண்ட் சுவர் எடுத்து அடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேற பாதை வசதி இல்லாமல் சுவர் ஏறி குதித்து வெளியேறும் நிலை இருந்து வந்துள்ளது.
image
இது தொடர்பாக சுந்தரம் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் இவர்களுக்கு உண்டான மூன்று அடி பாதையை ஒதுக்கித் தர வேண்டும் என்று கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பிறகும் சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் இவர்களது வீட்டிற்கு பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்காததால் தொடர்ந்து சுவர் ஏறிக் குதித்து இவர்களது வீட்டிற்குள் சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் சுந்தரம் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அவரது மகன் மற்றும் உறவினர்கள் உணவு மருந்து கொடுக்க கூட தினசரி சுவர் ஏறிக் குதித்து சென்று அவரை பராமரித்து வந்துள்ளனர். இதையடுத்து உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுந்தரம் நேற்று உயிரிழந்துள்ளார். ஆனால் அவருக்கு அஞ்சலி செலுத்த செல்லக் கூட வழியின்றி அவரது உயிரிழப்பிற்காக வந்த உறவினர்கள் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்று இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
image
அவரது உடலை வைக்க, குளிர்சாதன பெட்டியை கூட சுவர் ஏறிக் குதித்து கொண்டு சென்ற நிலையில், பாதையை அடைத்த பக்கத்து வீட்டுக்காரர்கள் பாதை கொடுக்க மறுத்ததால் பரிதவித்த சுந்தரத்தின் மகன்கள் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை ஆலங்குடி அரசமரம் அருகே சாலையில் மாலையை போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சுந்தரத்தின் உடலை கொண்டு செல்ல நீதிமன்ற உத்தரவுப்படி பாதை அமைத்து தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை அறிந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் உடனடியாக சம்மந்தப்பட்ட இடத்திற்குச் சென்று நீதிமன்ற உத்தரவுபடி அருகே உள்ள வீட்டாரிடம் பாதை கொடுக்க வலியுறுத்தினார். அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் உதவியோடு நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி மூன்றடி பாதையை ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு எடுக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் இரவு 11.30 மணியளவில் பாதை எடுக்கப்பட்டது. சுமார் 14 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பாதை பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டதால் சுந்தரத்தின் உடலை அதற்குப்பின் மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யும் நடவடிக்கைகளில் அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
image
இறந்த முதியவரின் உடலை வீட்டிலிருந்து வெளியே கூட கொண்டு செல்ல முடியாத நிலையில் அதே போல் உள்ளே சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத சூழலிலும் அவரது மகன்களும் உறவினர்களும் காலையிலிருந்து தவிப்புக்கு உள்ளாகினர். இந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியரின் மனிதநேயமிக்க நடவடிக்கையால் தற்போது பாதை வசதிக்கு தீர்வு ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.