கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு இன்னும் சில வாரங்களே இருக்கின்றன. வரும் ஏப்ரல் – மே மாதத்தில் தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. எனவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வகையில் வியூகம் வகுத்து வருகிறது. குறிப்பாக லிங்காயத் வாக்குகளை பெறுவதற்கு எடியூரப்பா இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைப்பாடு இருக்கிறது.
மீண்டும் எடியூரப்பா
எனவே அவரை ஓரங்கட்ட விரும்பாத டெல்லி, தேர்தல் பிரச்சாரக் குழுவில் முக்கியமான பதவியை கொடுத்து அரசியல் லைம் லைட்டில் வைத்துள்ளது. இந்த சூழலில் தான் மத்திய அமைச்சர் அமித் ஷா, எடியூரப்பா சந்திப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்ன நடந்தது எனக் கேட்கலாம். இன்று காலை பெங்களூரு வந்த அமித் ஷாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விஜயேந்திராவிற்கு முக்கியத்துவம்
அப்போது பூங்கொத்து கொடுக்க எடியூரப்பா காத்திருந்தார். ஆனால் அவர் கையில் இருந்த பூங்கொத்தை மகன் பி ஒய் விஜயேந்திரா கையில் கொடுக்குமாறு அமித் ஷா அறிவுறுத்தினார். ஏன்? எனக் கேட்பது போல் எடியூரப்பா விழித்துக் கொண்டிருந்தார். ஆனால் அமித் ஷா விடவில்லை. நீங்கள் பூங்கொத்தை விஜயேந்திராவிடம் கொடுங்கள் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
பூங்கொத்து அளித்ததில் ட்விஸ்ட்
வேறு வழியின்றி பூங்கொத்தை கொடுத்து விட்டார். பின்னர் விஜயேந்திரா கைகளால் பூங்கொத்தை அமித் ஷா பெற்றுக் கொண்டார். இதையடுத்து வேறொரு பூங்கொத்தை வாங்கி அதை அமித் ஷாவிடம் வழங்கினார் எடியூரப்பா. அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். இதற்கிடையில் மாறி மாறி புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வு கர்நாடக அரசியலில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
கர்நாடக அரசியல்
இரண்டு விதமான விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, எடியூரப்பாவின் காலம் முடிந்து விட்டது. இனிமேல் அவரது மகன் விஜயேந்திராவிற்கு தான் முக்கியத்துவம். ஏன், முதல்வர் வேட்பாளராக விஜயேந்திரா கூட நிறுத்தப்படலாம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இரண்டாவது, கர்நாடகாவில் பாஜக வேரூன்ற எடியூரப்பா எவ்வளவோ செய்திருக்கிறார்.
லிங்காயத் சமூக வாக்குகள்
அவர் இல்லாமல் இங்கு பாஜகவே கிடையாது. முதல்வராக, கட்சி தலைவராக ஏராளமான களப் பணிகளை ஆற்றியுள்ளார். அவரை இப்படி அவமதித்து விட்டார்களே? எடியூரப்பா இல்லாமல் லிங்காயத் சமூக மக்களை பெறுவது கடினம். பாஜக அவ்வளவு தான் என எதிர் தரப்பினர் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். இந்நிலையில் எடியூரப்பா, அமித் ஷா, விஜயேந்திரா சந்திப்பில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா கணக்கு
கடந்த முறையை போல தொங்கு சட்டமன்றம் அமைந்துவிடக் கூடாது. தனிப் பெரும்பான்மை பெற்று எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். எனவே அவரது ஷிகாரிபூரா சட்டமன்ற தொகுதியில் மகன் விஜயேந்திராவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.