எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்: 2 ஆண்டு சிறை தண்டனையை காரணம் காட்டி மக்களவை செயலகம் அறிவிப்பு; தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறியது தொடர்பாக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் நேற்று அறிவித்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தில், கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரை வைத்துள்ளது எப்படி?’ என்று தெரிவித்தார்.

இதை எதிர்த்து ராகுலுக்கு எதிராக குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் குற்றவாளி என அறிவித்து அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. மேலும், ராகுலுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியதோடு, தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, எம்பி, எம்எல்ஏக்கள் 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால், குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். தண்டனை விதிக்கப்பட்ட காலத்திற்குப் பின் மேலும் 6 ஆண்டுகள் என மொத்த 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் மக்களவையில் பட்ஜெட் தொடரில் ராகுல் பங்கேற்றார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். இதற்கிடையே, பிற்பகலுக்கு பிறகு ராகுலை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்து, மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. அதில், ‘சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, தீர்ப்பு வெளியான அன்றைய தினம் முதல் அவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என கூறப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரசுடன் கருத்து வேறுபாடு கொண்ட திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் ராகுல் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இது இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு கருப்பு நாள் என்றும் இப்பிரச்னையை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்த்து போராடுவோம் என்றும் காங்கிரஸ் கூறி உள்ளது. ராகுல் உண்மையை பேசி அரசியலமைப்பு மற்றும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வருவதால், அவரை தகுதி நீக்கம் செய்ய பாஜ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.

தற்போது ஒரு மாதத்திற்குள் உயர் நீதிமன்றம் மூலம் மேல்முறையீடு செய்து, தண்டனைக்கு ராகுல் தடை பெற வேண்டும். அப்போது தான் எம்பி பதவி மீண்டும் கிடைக்கும், வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதையும் தடுக்க முடியும். எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் உயர்மட்ட கூட்டம் கட்சி தலைமையகத்தில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும், வரும் 27ம் தேதி முதல் இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களுடன் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

* மக்களவைக்கு வந்த ராகுல்
பிரதமர்மோடிக்கு எதிரான அவதூறு வழக்கில் நேற்று முன்தினம் 2 ஆண்டு தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நேற்று மக்களவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். அமளியால் அவை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டதால் அவர் வெளியேறினார். பிற்பகலில் ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

* நாட்டிற்காக எந்த விலையையும் கொடுக்க தயார்
தகுதிநீக்கத்தை தொடர்ந்து ராகுல் காந்தி தனது டிவிட்டரில், ‘நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன். அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

வயநாடு தொகுதி காலியானதாக அறிவிப்பு
* ராகுல்காந்தி போட்டியிட்டு வென்ற வயநாடு தொகுதி தற்போது காலியானதாக மக்களவை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்,’ ஜலந்தர், லட்சத்தீவு, வயநாடு ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஜலந்தரில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்திரி காலமானார். லட்சத்தீவு தொகுதியில் வென்ற தேசியவாத காங்கிரஸ் எம்பி முகமது பைசல் கொலை வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
* வயநாடு தொகுதி எம்பி ராகுல் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.