புதுச்சேரியில் தமிழக காவலர் ஒருவர் உச்சகட்ட மது போதையில் புதுச்சேரி காவலர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து புதுச்சேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி கடலூர் எல்லையில் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட கன்னியகோயில் எல்லை பகுதி உள்ளது. அங்கு ஏராளமான மதுபான கடைகள் உள்ளன. அங்கு நேற்று மாலை 37 வயது மதிக்கதக்க நபரொருவர் உச்சகட்ட மது போதையில் அவ்வழியே செல்லும் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி வந்திருக்கிறார். இதுதொடர்பாக கிருமாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், தலைமை காவலர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அந்நபரை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை சோதனை செய்தபோது அவரிடம் இருந்த அடையாள அட்டையில் அவர் கடலூர் மாவட்டம் குளஞ்சாவடி காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ஜனார்த்தனன் என தெரியவந்ததது.
இதனைத்தொடர்ந்து அவரை கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் அமர வைத்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த ஜனார்த்தனன் அவரை காவல் நிலையம் அழைத்து வந்த காவலர்களை ‘ஒத்தைக்கு ஒத்த சண்டை செய்ய வா’ என அழைத்து ஒருமையில் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இக்காட்சி அங்கிருந்த போலீசார் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும் ஜனார்த்தனன் உச்சகட்ட மது போதையில் உள்ளதால் அவரை மருத்துவமனை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை செய்தபிறகே அவர் மீது வழக்கு பதியபடுமா அல்லது அவரின் காவல்துறை தலைமையகத்திற்க்கு புகார் தெரிவிக்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக காவலரொருவர், உச்சகட்ட மது போதையில் புதுச்சேரி காவல் நிலையத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டது கடுமையான கண்டனங்களை பெற்றுவருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM