மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாகக் கூறி 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் போன்ற அமைப்புகள் பாஜகவின் எதிர்ப்பாளர்களை மட்டுமே குறிவைத்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பாஜகவில் இணைந்தவுடன் தலைவர்கள் மீதான வழக்குகள் அடிக்கடி கைவிடப்படுவதாகவும் அல்லது புதைக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, புலனாய்வு அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதாக கூறியுள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியின் சமர்ப்பிப்பை கவனத்தில் கொண்டு, இரண்டு வாரங்களில் வழக்கை பட்டியலிட்டனர். கைதுக்கு முந்தைய மற்றும் பிந்தைய வழிகாட்டுதல்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் பின்பற்ற வேண்டும் என்றும் கட்சிகள் கோருகின்றன.
“தொண்ணூற்றைந்து சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக உள்ளன. கைதுக்கு முந்தைய வழிகாட்டுதல்களையும், கைதுக்குப் பிந்தைய வழிகாட்டுதல்களையும் நாங்கள் கேட்கிறோம்,” என்று திரு சிங்வி கூறினார்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 14 கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை; 30 நாட்கள் டைம்- சூரத் நீதிமன்றம் அதிரடி!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் எதிர்கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என கட்சிகளை ஒருங்கிணைத்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவரும் மற்றும் டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கடந்த மாதம் சிபிஐயாலும், பின்னர் அமலாக்கத்துறையாலும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.