ஒன்று திரளுங்கள்.. ராகுல் காந்திக்கு ஆதரவு.. சீமான் அறைகூவல்.. தமிழக அரசியலில் பரபர..!

கடந்த மக்களவை தேர்தலின்போது கர்நாடகாவில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி ” பெயரில் மோடி என வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்களே என்று பேசினார். அதாவது, நிரவ் மோடி, லலித் மோடி, ஆகிய மோடி என்று பெயர் வைத்துள்ளவர்கள் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி மறைமுகமாக நரேந்திர மோடியை சாடி பேசியிருந்தார்.

அதற்கு சூரத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம் உடனடியாக ஜாமீனும் வழங்கியது. தீர்ப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் தீவிர காங்கிரஸ் எதிர்பாளரான நாம் தமிழர் சீமானும் ஆதரவு அளித்திருப்பது முக்கியம் வாய்த்ததாக பார்க்கப்படுகிறது.

அடிப்படை உரிமையை பறிப்பதா?

வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ; தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசியதற்தாக காங்கிரசு கட்சியின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை விதித்திருக்கும் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்தவகையிலும் ஏற்புடையதல்ல! இந்திய அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை எனும் அடிப்படை உரிமையையே முற்றாகப் பறிக்கும் வகையில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பை முழுமையாக எதிர்க்கிறேன்.

கொடுங்கோன்மை

இத்தோடு, அவரது மக்களவை உறுப்பினர் பதவியும் முழுமையாகப் பறிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான சனநாயக விரோதமாகும்; வெளிப்படையாக நிகழ்ந்தேறும் கொடும் அநீதியாகும். நாட்டையாளும் பாஜக அரசு தனது அதிகாரப்பலத்தைக் கொண்டு, அத்துமீறலும், அடாவடித்தனமும் செய்து, தன்னாட்சி அமைப்புகளை முறைகேடாகக் கையகப்படுத்தி, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் சதிச்செயலைத் தொடர்ச்சியாக அரங்கேற்றுவது ஏற்கவே முடியாத பெரும் கொடுங்கோன்மையாகும்.

மக்களாட்சிக் கோட்பாட்டுக்கெதிரான பாஜக அரசின் இப்படுபாதகச்செயல்கள் நாட்டுக்குப் பெருங்கேட்டை விளைவிக்கும் தீங்காகும். மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்களவை உறுப்பினரை, இது போன்ற வழுவற்ற வழக்குகள் புனைந்து தகுதி நீக்கம் செய்வது என்பது குடியரசு அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் கொடுஞ்செயலாகும்.

ஜனநாயக ஆற்றல்கள் ஒன்றுதிரள வேண்டும்

இந்திய அரசியலமைப்பின் பிரதான தத்துவமான அதிகாரப்பகிர்தல் (Separation of Powers) என்கிற உயர்ந்த நடைமுறைக்கு எதிரான நடவடிக்கைகள் சனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் என்றால் மிகையாகாது. அதிகார வர்க்கத்தின் இத்தகைய கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எதிராக சனநாயக ஆற்றல்கள் ஒன்றுதிரண்டு, பாசிச பாஜகவின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக அறைகூவல் விடுக்கிறேன்” என சீமான் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.