செல்போனில் ஒளரங்கசீப் குறித்து தவறான ஸ்டேட்டஸ் வைத்ததற்காக, இளைஞர் ஒருவரின் குடும்பத்தை, கிராமத்தைவிட்டே வெளியேற்றி உள்ளனர்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து பிரிந்த மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள ஔரங்காபாத் நகரை, பெயர் (சத்ரபதி சம்பாஜி நகர்) மாற்றம் செய்தது தொடர்பாக ஏற்கெனவே உள்ளூர் அரசியல் கட்சியினருக்கு இடையே சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தற்போது புதிய பிரச்சினை ஒன்று வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹட்கனங்கலே என்ற தாலுகாவில் கடந்த வாரம் நடைபெற்ற சம்பவம் புதிய பிரச்சினைக்கு வித்திட்டுள்ளது. ஹட்கனங்கலே தாலுக்காவைச் சேர்ந்த சவர்டே கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான முகம்மது மொமீன் என்ற நபர், தன்னுடைய செல்போன் ஸ்டேட்டஸில், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் பற்றி தவறான தகவல்களைக் கொண்ட வீடியோ வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது அவருடைய செல்போனில், “நீங்கள் பெயரை மாற்றலாம்; ஆனால் வரலாற்றை மாற்ற முடியாது. இந்த நகரத்தின் ராஜா யார் தெரியுமா? அவருக்கு சாட்சியாக இந்த மலைகள் உள்ளன” என இந்தி மொழியில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
இது, அங்குள்ள இந்துத்வா உணர்வாளர்களைப் புண்படுத்தியுள்ளது. மதத்தைப் புண்படுத்தும் நோக்கில் இந்த ஸ்டேட்டஸை வைத்ததற்காக முகம்மது மொமீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த பரசுராம் சவுஹான், அத்தாலுக்காவில் உள்ள வட்கான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அதை வெளியிட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி, கைது செய்யப்பட்ட முகம்மது மொமீன், கோலாப்பூர் கிளைச் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது குடும்பத்தினரும் அக்கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது, அம்மாநில
இதுகுறித்து புகார்தாரரான சவுகான், “கடந்த மார்ச் 16ஆம் தேதி, ஔரங்கசீப்பை ஆதரிக்கும் விதமாக அவர் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி எங்களுக்குத் தெரியவந்தது. அதன்பேரில் போலீஸில் புகார் அளித்தோம். இதற்காக கிராமத்தில் இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தி, அவரது குடும்பத்தினரை கிராமத்தை விட்டு வெளியேற முடிவெடுக்கப்பட்டது. அத்துடன், போலீசாரும் மொமீனை கைது செய்தனர். தொடர்ந்து அவரது உறவினர்களும் கிராமத்தைவிட்டு வெளியேறினர். அவர்கள் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளனர். என்றாலும், இதை மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக்க விரும்புகிறோம். இதுகுறித்து கிராம மக்களுடன் இணைந்து பேசி விரைவில் இறுதி முடிவெடுப்போம். எனினும், எங்கள் அனுமதி இன்றி அவர்கள் இந்த கிராமத்திற்குள் நுழைய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டிருக்கும் மொமீனின் தந்தை யூனுஸ், ”அந்தக் கிராமத்தில் உள்ள சிலர் எங்களை மீண்டும் திரும்பி வருமாறு அழைத்துள்ளன. இந்த விஷயத்தில் மக்கள் நல்ல முடிவை எதிர்பார்க்கின்றனர். என் மகன் செய்த தவறுக்கு தக்க தண்டனை கிடைத்தால் அனைத்து பிரச்சினைகளும் சுலபமாக தீர்ந்துவிடும்” என உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை குறித்து வட்கான் காவல் துறை ஆய்வாளர் பைரு தலேகர், ”மொமீன் வைத்திருந்த ஸ்டேட்டஸ், அப்பகுதியில் பிரச்சினை வெடிப்பதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேநேரத்தில், அவரது குடும்பம் கிராமத்தைவிட்டு வெளியேறியது குறித்து தனக்கு எதுவும் தெரியாது. அந்தக் குடும்பத்தைக் கட்டாயமாக வெளியேறச் சொல்லி யாராவது வெளியேற்றினார்களா என்ற புகாரும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. ஒருவேளை, அதுகுறித்து புகார் வந்தால், நாங்கள் அவர்கள்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM