தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆனலைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேரவையில் பேசினர். அந்தவகையில் அதிமுக சார்பில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆதரித்து சட்டப்பேரவையில் தளவாய் சுந்தரம் பேசினார். இதனை தொடர்ந்து ஓ.பன்னேர்செல்வத்திற்கு பேச அனுமதி வழங்கப்பட்டது. அப்போது அதிமுக சார்பில் மசோதாவை வரவேற்பதாக குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்சிக்கு ஒருவர் மட்டுமே பேச அனுமதி என கூறிவிட்டு பெரும்பான்மை இல்லாதவரை பேச அனுமதித்தது எப்படி? என்றும் எடப்பாடி பழனிசாமி அணியினர் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து முக்கிய மசோதா என்பதால் முன்னாள் முதலமைச்சர் என்கிற முறையில் ஓ.பன்னீர்செல்வம் பேச வாய்ப்பு அளித்ததாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். பின்னர் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுக சார்பாக பேச அனுமதி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அணியினர் வெளிநடப்பு செய்தனர்.