தமிழில் `ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி `கேம் ஓவர்’, `ஆரம்பம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும் தற்போது பாலிவுட் படங்களில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். தற்போது புதிதாக ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்டதன் மூலம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
டாப்ஸி, சமீபத்தில் Lakme Fashion Week X FDCI நிகழ்ச்சியில் வடிவமைப்பாளர் மோனிஷா ஜெய்சிங் உருவாக்கிய சிவப்புநிற கவர்ச்சியான உடையுடன், ஷோ டாப்பராக ராம்ப் வாக் செய்தார்.
அவர் அந்த உடையுடன் கடவுள் லக்ஷ்மி உருவத்துடன் நவீனத்தையும் பாரம்பர்யத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட நெக்லஸையும் அணிந்திருந்தார். இதை நடிகை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிறகு அவரின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் டாப்ஸியின் தோற்றத்தை ஆதரித்தாலும் சில நெட்டிசன்கள் அவரை கடுமையாகச் சாடியுள்ளனர்.
கவர்ச்சியான ஆடையுடன் எப்படி கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை அணியலாம் என விமர்சித்து வருகின்றனர். ஏற்கெனவே வெளிநாட்டினர் இப்படியான நகைகளை அணிந்து கடவுளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர், ஆனால் ஓர் இந்திய நடிகையே எப்படி கவர்ச்சியான உடையுடன் கடவுள் நகையை அணியலாம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.