பண்ருட்டி: ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு மதிப்பிருக்கிறது, அவர் காந்தியத்தை கடைபிடித்தும் வருகிறார். எனவே பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் அது அச்சத்தை கொடுக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வாங்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து மக்கள் மன்றத்திற்கு நீதிமன்றத்திற்கும் செல்ல விருக்கிறோம். மக்கள் மன்றமும், நீதிமன்றமும் எங்கள் பக்கம் இருக்கும் என நம்புகிறோம். நியாயம் வெல்லும் என்பது எங்கள் கருத்து.
சர்வாதிகாரம் மனநிலை கொண்டவர்கள் தங்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு எதிராக எந்த இடத்திற்கும் செல்லக் கூடியவர்கள், எந்த தவறையும் செய்வார்கள் என பலமுறை நான் கூறியிருக்கிறேன். இன்று மோடியும் பாஜகவும் அதைத் தான் செய்கிறார்கள்.கர்நாடகத்தில் எந்த உள்நோக்கமும் இல்லாமல், யாரையும் குறிக்காமல், ஒப்பீடு இல்லாமல் இயல்பாக பேசப்பட்ட பேச்சுக்கு எதிராக குஜராத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது ஏன்?
கர்நாடகத்தில் பாஜக இல்லையா என கேள்வி எழுப்பியவர். அது தொடர்பான வழக்கின் மனுதாரர், குறிப்பிட்ட நீதிபதி விசாரிக்க சம்மதிக்கவில்லை. பின்னர் நீதிபதி மாற்றப்பட்டு, புதிய நீதிபதி வந்தபின் தீர்ப்பு வாங்கப்படுகிறது. இதிலென்ன ஜனநாயகம் இருக்கிறது. ஹிட்லரும், முசோலினியும் என்ன செய்தார்களோ அதையே தான் மோடியும் செய்கிறார். மோடியின் நோக்கம், ராகுல் காந்தி மக்களவையில் பேசக்கூடாது, வரக்கூடாது என்பதற்காகத்தான் இத்தகைய செயலை செய்துள்ளனர். இதைத்தான் நாங்கள் ஜனநாயகப் படுகொலை என்கிறோம்.
மக்களவை ஜனநாயகம் என்பது, எதிர்க்கட்சிகள் பேச வேண்டும், ஆளும்கட்சி பதிலளிக்க வேண்டும். ஆளும் மத்திய அரசோ எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. அதன்பிறகு ஜனநாயகம் எவ்வாறு செயல்படுத்த முடியும். ராகுல் காந்தி செல்லுமிடங்களில்லாம் கூட்டம் கூடுகிறது. அவரது கருத்துக்கு மதிப்பு கூடுகிறது. இந்தியாவிலும் உலக நாடுகளிலும் அவர் கவனிக்கப்படுகிறார். காந்தியத்தை அவர் கடைபிடித்துவருவது போன்ற செயல்கள் மோடிக்கும், பாஜகவுக்கும் அச்சத்தை கொடுக்கிறது. எனவே அவர்கள் இந்த தவறை செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.