கீழடி அருங்காட்சியகம் மெக்சிகோ தூதர் வியப்பு: பழம்பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்

திருப்புவனம்: கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்த மெக்சிகோ நாட்டின் தூதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி பழமையான பொருட்களை கண்டு வியப்படைந்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் இதுவரை  8 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இங்கு முற்கால தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு கலைப்பொருட்கள், ஆயுதங்கள், தங்க அணிகலன்கள், இரும்பு பொருட்கள், சிலைகள், முதுமக்கள் தாழிகள், உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. தமிழர்களின் மரபை உறுதி செய்யும் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கலை பொக்கிஷங்கள், கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனை கடந்த 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தினமும் ஏராளமான பார்வையாளர்கள், அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், இந்தியாவிற்கான மெக்சிகோ நாட்டின் தூதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி மற்றும் தூதரக அதிகாரிகள் நேற்று முன்தினம் கீழடி அருங்காட்சியகத்திற்கு வருகை தந்தனர். அவர்களை கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்ரமணியன் வரவேற்றார்.  அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்த தூதர் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பழமை வாய்ந்த பொருட்களை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அவற்றின் வரலாற்று பின்னணி, தமிழர்களின் பாரம்பரியம் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டு வியந்தார். மேலும் 7ம் கட்ட அகழாய்வு நடந்த தளம் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளதை அறிந்து, அதனையும் பார்வையிட்டார். கீழடி அருங்காட்சியகத்திற்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமானோர் வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.