கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், சாக்கோட்டையில் விளை நிலங்களில் புறவழிச் சுற்றுச் சாலை அமைப்பதைக் கண்டித்து விவசாயி சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கும்பகோணம் புறவழிச் சுற்றுச் சாலையில் மீதமுள்ள கிருஷ்ணாபுரம் – தாராசுரம் வரை சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, சாலைக்கான இடம் அளவீடு செய்து நில எடுப்பிற்கான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தரிசு நிலத்தில் செய்த அளவீட்டை மாற்றி, விளை நிலங்களில் தற்போது சாலை அமைக்கும் பணியினை மேற்கொள்ள இருப்பதாக வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் பழைய அளவீட்டின் படி சாலை அமைக்க வேண்டும், விளை நிலங்களில் சாலை அமைப்பதை கண்டித்து சாக்கோட்டை கடைத்தெருவில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயச் சங்க திருவாரூர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார், பாஜக மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் மற்றும் பல்வேறு கட்சியினர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.