கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டாடாபாத் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நித்யா என்ற திருநங்கை வாகன ஓட்டிகளிடம் வசூலில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரிடம் பெண் காவலர் ஒருவர், இரவு நேரத்தில் பணம் வசூலிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால், பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் போலீசாரின் ரோந்து வாகனத்தை சேதப்படுத்தியும், பெண் காவலரையும் தாக்கியுள்ளனர். இது குறித்து அந்த பெண் காவலர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் திருநங்கைகள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக திருநங்கைகள் காவல்நிலையத்திற்கு சென்றபோது காவல்துறையினர் அவமரியாதையுடன் நடத்தியுள்ளனர். இதையடுத்து திருநங்கைகள் அனைவரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது, ” காவல் துறையினர் எங்கள் மீது பொய்வழக்குப் போடுகின்றனர். இப்படித் தொடர்ந்து நடைபெற்றால் நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பே தற்கொலை செய்து கொள்ள தயாராக இருக்கிறோம். எங்களுக்கு ஏதேனும் வேலை வாய்ப்பை உருவாக்கி தர மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றுத் தெரிவித்துள்ளனர்.