ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறு பரப்பியதால் போகலூர் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முத்துவயல் பகுதியை சேர்ந்தவர் போகலூர் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர் பிரபா கார்த்திகேயன்(34). இவர், செவ்வூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன்(28) என்பவரிடம் பாஜகவில் இளைஞரணி நிர்வாகி பதவிக்கு பணம் கேட்டதாக பாஜக நிர்வாகிகள் சமூக வலை தளங்களில் தகவல் பரப்பியுள்ளனர். மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் பிரபா கார்த்திகேயனை பற்றியும் தவறான தகவல்களையும் சமூக வலைதளங்களில் பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபா கார்த்திகேயன் நேற்று முன்தினம், தனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதாக ராமநாதபுரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் பிரபா கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார், அக்கட்சியின் நிர்வாகிகள் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.