சென்னை: சென்னை – மந்தைவெளியில் உள்ள மேற்கு வட்டச் சாலைக்கு “டி.எம்.சௌந்தரராஜன் சாலை” எனப் பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் 1923-ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று இசை ஞானத்தை வளர்த்தார். 1950-ம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் சிறப்புமிக்க பாடகராகத் திகழ்ந்த அவர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பிடித்தார். டி.எம்.சௌந்தரராஜன் கடந்த 25.5.2013 அன்று மறைந்தார்.
இந்நிலையில், டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் வாழ்ந்த இல்லம் அமைந்த மந்தைவெளியில் உள்ள சாலைக்கு “டி.எம். சௌந்தரராஜன் சாலை” எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 24) காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் புகழுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் பாடிய புகழ்பெற்றப் பாடல்களை நினைவுகூரும் வகையில் இன்னிசைக் கச்சேரி இன்று (மார்ச் 24) மாலை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.