சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் அஜித்குமார் தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில், அஜித்தின் தந்தை சுப்ரமணியம் (86) இன்று மரணமடைந்தார். கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை 4:30 மணிக்கு உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, அஜித் தரப்பில் வெளியான அறிக்கையில், “எங்களது தந்தையார் பி.எஸ்.மணி (85) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என அவரது தந்தை மறைவு உறுதிசெய்தார். பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில், அஜித்தின் தந்தை உடல் இன்று மதியம் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் நேரில் வந்து நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஜித்ததின் தந்தை மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அஜித் தரப்பில் வெளியிட்ட அந்த அறிக்கையில்,”எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், பல்வேறு பிரபலங்கள் அஜித்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய்யும், அஜித்தை நேரில் சந்தித்து, அவரது தந்தை மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்து, ஆறுதல் கூறி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன், கருப்பு நிற காரில் சென்றுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.