வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழிப்பறி குறித்து புகார் அளிக்க சென்ற தம்பதியை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலைய உதவி ஆய்வாளர், மற்றும் தலைமை காவலர் மீது ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
திருவள்ளுர் மாவட்டம் திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் (38) கட்டடத் தொழிலாளியான இவர் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணத்தை எடுத்துக் கொண்டு சென்று உள்ளார். அப்பொழுது சாலையில் சிறுநீர் கழிக்க நின்றபோது இவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி 14,500 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். திருமழிசை பகுதியை சேர்ந்த தங்கம், லோகேஷ், கார்த்திக் ஆகியோர்தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சிசிடிவி கேமரா ஆதாரத்துடன் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் எல்லப்பன். ஆனால் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததோடு, புகாரை திரும்ப பெறவும், வழிப்பறி செய்யாமல் திருடி சென்றதாக புகாரை அளிக்குமாறு வெள்ளவேடு உளவு பிரிவு உதவி ஆய்வாளர் திருப்பதி மற்றும் தலைமை காவலர் சவரிதாஸ் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட எங்களது புகார் குறித்து விசாரிக்காமல் ஏன் மிரட்டுகிறீர்கள் என்று கேட்டதற்கு மிகவும் தரக்குறைவாய் பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆவடி காவல் ஆணையரகத்தில் எல்லப்பன் நேரில் வந்து புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் மாவட்ட துணை ஆணையருக்கு புகார் விசாரணை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் குற்றப்பிரிவுகள் குறைத்து போட்டதற்கான விளக்கத்தை அளிக்குமாறு இரு போலீசாருக்கும் ஆவடி காவல் ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. சரமாரியாக தாக்கி வழிப்பறி செய்ததற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் தரக்குறைவாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறையினர் மீது ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM