மார்ச் 22-ம் தேதி சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். திமுக-வின் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் மற்றும் திமுக-வின்அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் ஆரம்பித்தவுடனே, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தீர்மானங்களை வாசிக்கக் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் வரை கூட்டம் நடைபெற்றது.
நீண்ட நேரம் நடைபெற்ற கூட்டத்தில் அப்படி என்னதான் நடந்தது என்பது என்பது குறித்து உள்ளே இருந்த மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம், “இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து நீண்ட விவாதம் நடத்தப்பட்டது. அதன்பின் அதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு பேசிய துரைமுருகன் நூற்றாண்டு விழாவை வெகு விமர்சையாக நடத்துவது குறித்துப் பேசியிருந்தார். கூட்டத்திலிருந்த சில மாவட்டச் செயலாளர்கள் சந்தேகங்கள் கேட்க, அதற்கு மேடையில் அமர்ந்திருந்த முதல்வர், துரைமுருகன் பதிலளித்தனர்.
கடைசியாக முதல்வர் ஸ்டாலின் பேச ஆரம்பித்தார். அவர் பேச ஆரம்பிக்கும்போதே முகம் கோவமாக இருப்பதை அங்கிருந்த அனைவராலும் நன்றாக உணர முடிந்தது. சில இடங்களில் தலைமையை மீறி வருந்தத்தக்க சில செயல்கள் நடக்கிறது என்ற கடுகடுத்த குரலில்தான் பேசவே ஆரம்பித்தார். இதேபோன்ற செயல்கள் தொடர்ந்தால் தலைமை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. கண்டிப்பாக உரியவர்கள் மீது நடவடிக்கை பாயும். முதல்வர் யாரையும் பெயர் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றாலும் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய மாவட்ட செயலாளர்களைத்தான் சொல்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், திமுகவின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கட்சிக்கு எந்தவகையிலும் அவப்பெயர் ஏற்படுத்திவிடாத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆணவத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படவேண்டும். பொது இடங்களில் பேசும்போது வார்த்தையைப் பார்த்துப் பயன்படுத்தவேண்டியது மிகவும் அவசியம். எதிர்க்கட்சி ஒரு அணியில் திரண்டு நம்மைத் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறது. மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டிய பொறுப்பு அனைவர்க்கும் இருக்கிறது. பொதுமக்களிடம் இந்த பட்ஜெட்டை எடுத்துச் செல்லுங்கள். அவரவர் பகுதியில் பட்ஜெட் விளக்கக் கூட்டத்தை நடத்துங்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் திமுக வெற்றிபெறவேண்டும். அதற்கு இப்போதிலிருந்தே தேர்தல் பணிகளைத் தொடங்குங்கள். அதற்கு முன்பாக புதிய உறுப்பினர் சேர்க்கை செய்துமுடிக்க வேண்டும். வீடு தேடு செல்வது, திண்ணை பிரசாரங்கள், முக்கிய இடங்களில் முகாம்கள் என்று திமுக உறுப்பினர் சேர்க்கையை நடத்துங்கள். கட்சிக்கு மேலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களின் சேர்க்கையைச் செய்து முடிக்க வேண்டிய பணி உங்களுடையது. அதற்கான பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அதற்கான பூத் சிலிப் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் கூட்டம் முடிந்ததும் உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பல விஷயத்தையும் கறாராகப் பேசினார்” என்றார்கள் விளக்கமாக.
மேலும், முதல்வர் பேசியது குறித்து விவரமறிந்த கட்சி மூத்த உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம், கட்சியினர் தலைமையின் கட்டுப்பாட்டில் இல்லை என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சனம் வைக்கும் அளவுக்கு சமீபத்திய செயல்பாடுகள் அமைந்துவிட்டன. இதனைச் சரிசெய்தாகவேண்டிய கட்டாயமும், தவறு செய்தவர்களைக் கண்டிக்க வேண்டிய கடமையும் தலைவருக்கு இருக்கிறது. இதனால்தான், தலைமையை மீறிச் செயல்படுகிறீர்கள் என்று தலைவர் இரண்டாவது முறையாக மேடையில் மிகவும் கோவமாகப் பேசியிருந்தார். காரணம், சமீபத்தில் மூத்த அமைச்சர் பொன்முடி பேசிய விதமும், திருச்சியில் நடந்த தாக்குதல் செயல்பாடுகளும் தலைவருக்கு கோவத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இருந்தபோதிலும் யாரையும் தனிப்பட்டுப் பெயர் குறிப்பிட்டுச் சொல்லாது அனைவர்க்கும் எச்சரிக்கை விடுவது போலவே பேசியிருந்தார். இதே நிலை தொடர்ந்தால் கண்டிப்பாக மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என்று தலைவர் சொன்னதில் அங்கிருந்தவர்கள் மட்டுமின்றி, கட்சியினர் பலரும் அதிர்ந்து போனது உண்மைதான். காரணம் இது மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் விடப்பட்ட எச்சரிக்கை கிடையாது. ஒட்டுமொத்த கட்சியினருக்கும் விடப்பட்ட எச்சரிக்கைதான். இதனால், சில மாவட்டச் செயலாளர்கள் முதல்வரிடம் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிக்க இப்போதிலிருந்தே திட்டங்களைத் தீட்டத் தொடங்கிவிட்டனர்” என்றார்கள் விரிவாக.
ஆளும் கட்சியின் செயல்பாடுகள் அனைத்தையும் எதிர்க்கட்சிகள் உன்னிப்பாகக் கவனித்துவருகிறார்கள். இதுபோன்ற சூழலில், திமுகவினரின் செயல்பாடுகள் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கட்சியின் மீதும் ஆட்சியின் மீதும் குற்றச்சாட்டை முன்வைக்க வாய்ப்பாக அமைகிறது. இவை அனைத்துமே கடைசியில் கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்குத்தான் பெரும் நெருக்கடியைக் தருகிறது. அதனால்தான், யாராக இருந்தாலும் மாற்றப்படுவார்கள் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இனியாவது உடன் பிறப்புக்கள் முதல்வரை நிம்மதியாகத் தூங்கவிடுவார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.