ஜலந்தர்: பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை, போலீஸார் கடந்த 6 நாட்களாக தேடி வருகின்றனர்.
தேடுதல் வேட்டை தொடங்கிய கடந்த 18-ம் தேதி ஜலந்தரின் ஷாகோட் சுங்கச்சாவடி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். மெர்சிடஸ் எஸ்யூவி வாகனத்தில் முன் இருக்கையில் அம்ரித்பால் சிங் அமர்ந்துள்ளார். அதன்பின் அவர் மாருதி பிரஸ்ஸா வாகனத்தில் வேறு உடையில் இருக்கிறார்.
அதன்பின் உடையை மாற்றிவிட்டு பேண்ட், சட்டை அணிந்து தலைப்பாகையை மாற்றி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். அந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் தாராபூர் என்ற இடத்தில் ஆட்டோ வில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், லூதியா னாவைச் சேர்ந்த ஒருவர் தனது ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கை மர்ம நபர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி திருடிச் சென்றதாக போலீஸில் புகார் செய்தார்.
இதன்படி, ஷீக்குபூர் பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்ததில், அமரித்பாலும் அவரது உதவியாளர் பாப்பல் ப்ரீத் என்பவரும் அந்த வண்டியில் பயணித்தது தெரியவந்துள்ளது.
அம்ரித்பால் சிங் தப்பி ஓடுவதற்காக பயன்படுத்திய வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அடைக்கலம் கொடுத்த பெண்..: அம்ரித் பால் சிங், கடந்த 19-ம்தேதி ஹரியாணாவின் குருஷேத்திரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளார். 20-ம் தேதி அந்த வீட்டிலிருந்து குடை பிடித்தபடி அம்ரித்பால் வெளியேறியது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இது தொடர்பாக அந்த வீட்டின் பெண் பல்ஜீத் கவுரை கைது செய்த ஹரியாணா போலீஸார், அவரை பஞ்சாப் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 6-வது நாளாக நேற்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.