திருவள்ளூர்: சென்னை அடுத்த நெமிலிச்சேரியில் உள்ள டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிற்சாலையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை சார்பில் 52 வது தேசிய பாதுகாப்பு மாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இயக்குநர் எம்.வி.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் எம்.வி.செந்தில்குமார் 52வது தேசிய பாதுகாப்பு மாதத்தின் கருப்பொருளான ”நமது இலக்கு ஆபத்தில்லா சூழலை உருவாக்குவது” குறித்தும், பணியிடத்தில் பாதுகாப்பு குறித்தும் தொழிலாளர்களிடம் எடுத்துரைத்தார்.
மேலும் தொழிற்சாலையில் விபத்து இல்லாத சூழலை உருவாக்குவது குறித்தும், பணி நேரத்தில் தொழிலாளர்களின் மனநிலை குறித்தும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் எஸ்.குமார் தொழிலாளர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் எம்.வி.செந்தில்குமார் தலைமையில் தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்சியில் திருவள்ளூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் கே.துரைராஜ், உதவி இயக்குநர் சி.பன்னீர்செல்வம் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.