திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வுக்காக சென்ற மாவட்ட ஆட்சித் தலைவரின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கலெக்டர் அறிவித்திருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியாளர் பாஸ்கர் பாண்டியன் அம்மாவட்டத்தின் ஆண்டியப்பனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார. அப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளையும் மக்களிடம் உள்ள குறைகளையும் கேட்டறிந்தார்.
அப்பகுதியின் மேல தெரு மற்றும் குறிஞ்சி வட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் திடீரென மாவட்ட ஆட்சித் தலைவரின் வாகனத்தை முற்றுகையிட்டதால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவரின் வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள் போடப்பட்டுள்ள பவர்பிளாக் சாலைகள் கையால் உடையும் வகையில் தரமற்றதாக இருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் மின்கம்பத்தினை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் இவை தொடர்பாக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் ஆட்சியரின் வாகனத்தை சிறிது நேரம் சிறைபிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.