நியூடெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதாவது, தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது.
‘மோடி குடும்பப்பெயர்’ குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் இரண்டாண்டு கால தண்டனை விதிக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் பதவி பறிப்பும் சட்ட விளக்கமும்
சட்டப்படி, இந்திய நீதிமன்றம் ஒன்று, எம்.பி ஒருவருக்கு இரண்டாண்டு அல்லது அதற்கு மேல் தண்டனை வழங்கியதுமே, அதாவது தீர்ப்பு வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் அமலுக்கு வந்துவிட்டது. அதேபோல, சூரத் நீதிமன்ற தீர்ப்பின் நகலின் அடிப்படையில், மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.
இந்த பதவி தகுதி நீக்க வழக்கில், ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, அதனை விசாரிக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றம் ராகுல் காந்தி ‘குற்றவாளி’ என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கும் வரை ராகுல் காந்தி எம்.பி இல்லை.
ராகுல் காந்தி இதை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றம் செல்வதுதான் அவருக்கான வாய்ப்பு. மேல்முறையீட்டில் தண்டனையையும், ‘குற்றவாளி’ என்ற தீர்ப்பையும் நிறுத்தி வைக்க முறையீடு செய்ய வேண்டும். அந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி முயற்சிகளை தீர்ப்பு வெளிவந்த அடுத்த நிமிடத்திலேயே தொடங்கிவிட்டது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மூலமாக தகுதி நீக்கம்
எம்.பி. எம்.எல்.ஏ-க்களின் பதவிபறிக்கப்படுவதற்கான சூழ்நிலை பொதுவாக மூன்று சந்தர்ப்பங்களில் ஏற்படுகிறது.
பதவி தகுதி நீக்கம் முதல் சூழ்நிலை
1.முதலாவதாக, பதவியில் உள்ள ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் இருந்தால்
2. மனநிலை சரியில்லாமல் இருப்பது
3. இந்திய குடியுரிமை இல்லாமல் இருப்பது
பதவி தகுதி நீக்கம் இரண்டவது சூழ்நிலை
கட்சித் தாவல் தடைச் சட்டம்
பிற கட்சிகளுக்கு மாறும் மக்கள் பிரதிநிதிகள் மீது தகுதிநீக்கம் கொண்டு வரும் சூழ்நிலை காட்சித் தாவல் தடைச் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கபப்டும்.
பதவி தகுதி நீக்கம் மூன்றாவது சூழ்நிலை
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மூலமாக தகுதி நீக்கம் செய்யப்படுவது
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 (Representation of the People Act) என்ற முக்கியமான சட்டத்தின் பல உட்பிரிவுகளின் கீழ் பதவி நீக்கம்
1. பிரிவு 8-இன் கீழ், பதவியில் இருக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் (MPs), சட்டப்பேரவை உறுப்பினர் (MLA), சட்டமேலவை உறுப்பினர் (MLC) ஆகியோர் மீது கிரிமினல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்டால் அவர்கள் பதவி தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.
பிரிவு 8-இன் கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் நபர்கள், தண்டனைக் காலம் நீங்கலாக 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
2. பிரிவு 9இன் கீழ், ஊழல், அரசாங்க ஒப்பந்தங்களில் தலையிடுவது போன்ற காரணங்களுக்காக பதவி தகுதிநீக்கம்
3. பிரிவு 10இன் படி, தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால் தகுதி நீக்கம் செய்யலாம்
4. பிரிவு 11, ஊழல் நடைமுறைகளுக்கான தகுதி நீக்கம்
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4)
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4), தகுதிநீக்கம் செய்யப்படும் நபர் தீர்ப்பு வெளியான நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை தகுதிநீக்கம் செய்யக்கூடாது எனக் குறிப்பிடுகிறது.
அதனால் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைத்தால், தகுதி நீக்கமும் நிறுத்தப்படும்.
எனவே, நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு என ராகுல் காந்தி மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது, அதுபோல, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அவர் எம்.பியாக தொடவாரா? அல்லது 2024 பொதுத் தேர்தல் காங்கிரசுக்கு கானல்நீராகுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.