சேலம்: கட்சி நிர்வாகிகள் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதால் பாஜகவில் இருந்து விலகுவதாக சேலம் கிழக்கு மாவட்ட பாஜக செயலாளர் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி பல்வேறு கட்சிகளுக்கு இணைவதும், அரசியலில் இருந்து ஓய்வெடுப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்ட பாஜக கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த குட்டி என்கிற சோலை குமரன், சேலம் மாவட்டத்தில் பாஜக செயல்படவில்லை என்றும் உழைப்பவர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லை மற்றும் நிர்வாகிகள் செயல்பாடுகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறி கட்சியை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் சோலைகுமரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”சேலம் மாவட்டத்தில் பாஜக முற்றிலும் இல்லாமல் போகும் நிலை உருவாகி வருகிறது. இதற்கு காரணம் இங்குள்ள முக்கிய நிர்வாகிகள்தான். சேலம் கிழக்கு மாவட்டத்தில் பலரும் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். நிர்வாகிகளின் செயல்பாடுகளில் திருப்திகரமாக இல்லாததாலும், கட்சியில் உழைக்கும் என்னை போன்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லாததால்தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
என்னை போல் இன்னும் ஆயிரக்கணக்கானோர் இந்தக் கட்சியை விட்டு வெளியேற உள்ளனர். எனது தலைமையில் கட்சிக்கு வந்த அனைவருமே தற்போது பாஜகவை விட்டு வெளியேறி விட்டனர்” என்று அவர் கூறினார்.