புதுடெல்லி: தியாகிகள் தினமான நேற்று புரட்சியாளர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரும் லாகூர் சதி வழக்கில் கடந்த 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம்தேதி ஆங்கியலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
அவர்களின் தியாகம் மற்றும் வீரம் பற்றிய வரலாறு இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிகவும் உத்வேகம் தரும் அத்தியாயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அவர்களின் நினைவு நாள், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவில் கொள்ளும். நமது சுதந்திரப் போராட்டத்தில் ஈடு இணையற்ற பங்களிப்பை செய்த பெருமக்கள் இவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
குறுந்தொகுப்பு வெளியீடு: மூன்று சுதந்திரப் போராட்ட வீரர்களையும் பாராட்டும் தனது முந்தைய உரைகளின் குறுந்தொகுப்பு ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் பலரும் விடுதலைப் போராட்ட வீரர்கள் மூவருக்கும் அஞ்சலி செலுத்தினர். மகாத்மா காந்தியின் நினைவாக ஜனவரி 30 அன்றும் தியாகிகள் தினமாக இந்தியா அனுசரித்து வருகிறது.