அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒப்புக் கொள்ளாத நிலையில், ‘பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதங்களை மாநிலங்களவையில் நடத்தக்கூடாது’ என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், ‘பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதங்களை நடத்த அவகாசம் இல்லை. அந்த ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல்களை விரைவாக அளிக்க வேண்டும்’ என அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சிகள் உறுதியாக இருப்பதாக திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
நேற்று மாநிலங்களவை கூடியபோது முதலில் மதியம் இரண்டு மணி வரையும், பின்னர் நாள் முழுவதுமும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, “அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கிறது. மத்திய அரசு இதுவரை அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற குழு விசாரணைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இத்தகைய சூழலில் பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கு மாநிலங்களவையில் எப்படி அனுமதி அளிக்க முடியும்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் கூறுகையில், “மாநிலங்களவையின் ஒப்புதல், பட்ஜெட் தொடர்பான ஒதுக்கீடுகளுக்கு கட்டாயம் இல்லை. மக்களவை ஒப்புதலுக்குப் பிறகு இரண்டு வாரங்களில் மாநிலங்களவை ஒப்புதல் அளிக்காவிட்டால், ஒப்புதல் இன்றியே அரசு ஒதுக்கீடுகளை அமல்படுத்தலாம்.
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, அதானி குழும பங்குகளில் முதலீடு செய்து இருக்கிறது. எல்ஐசி-யில் உள்ள பணம் பொதுமக்களின் பணம். ஆகவே மக்களின் பணம் குறித்த வினாக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் இந்த கோரிக்கையில் உறுதியாக இருக்கிறது. எங்களது கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்காதது கண்டனத்திற்குரியது” என அவர் குறிப்பிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM