தருமபுரி அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி, திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரொருரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரியை அடுத்த செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இவர் தருமபுரியை சேர்ந்த ஒரு 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் தேடி வந்தனர். இதையடுத்து கார்த்திக்கின் செல்போன் நம்பரை வைத்து தேடும்போது, இருவரும் திருப்பூரில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் இருவரையும் தருமபுரிக்கு அழைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவிக்கு ஆசைவார்த்தை கூறி, கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையும் செய்ததாக, கார்த்திக் மீது தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டம் மற்றும் பெண்ணை கடத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM