கும்பகோணம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கும்பகோணத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கழுத்தில் பதாகை அணிந்து மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
கும்பகோணத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வாழ்வாதார உரிமை மீட்புக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஜாக்டோ ஜியோ தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். இதில் ஜாக்டோ ஜியோ கும்பகேணம் பகுதி பொறுப்பாளர்கள் ராஜா, அறிவுடைநம்பி, கலைச்செல்வன், விஜயக்குமார், சாமிநாதன் மற்றும் கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
இதில், உச்சிப்பிள்ளையார் கோயிலிலிருந்து மகாமக குளம் வரை மனித சங்கலிப் போராட்டத்தில் பங்கேற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை, சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டனம் முழக்கமிட்டனர். இதில் ஆண்கள் கழுத்தில் பதாகையை அணிந்து கொண்டு நூதன முறையில் கோஷமிட்டனர்