கர்நாடக இசைக் கலைஞரும், பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு அவர் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி உலகம் முழுதும் உள்ள இசை பிரியர்களை கலக்கமடையச் செய்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு கீ ஹோல் அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. “அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகின்றது. அவரது மற்ற அனைத்து அளவுருக்களும் நன்றாக உள்ளன, ” என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் யோகோ ஓனோ லெனான் மையத்தில் உள்ள டங் ஆடிட்டோரியத்தில் பாம்பே ஜெயஸ்ரீ நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு மிகச்சிறந்த கர்நாடக பாடகியான ஜெயஸ்ரீ பல மொழிகளில் பாடும் திறன் கொண்டவர். கர்நாடக சங்கீதம் மட்டுமின்றி பல இந்தியத் திரைப்பாடல்களையும் பாடி ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்த பெருமை அவருக்கு உள்ளது.
‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு பிரபல கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி கடந்த ஞாயிறன்றுதான் வெளியானது. இதனால் அன்று முதல் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
திரை இசையில் தமிழ் மட்டுமின்றி, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் அவர் பல பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக மின்னலே திரைப்படத்தில் இவர் பாடிய ‘வசீகரா’ பாடல் காலத்தால் அழியாத பாடலாக இன்னும் கொடி கட்டிப் பறக்கிறது. இந்த பாடல் மூலம் இவரது ரசிகர் கூட்டம் பன்மடங்காகப் பெருகியது. அதை தொடர்ந்து ஏராளமான ஹிட்பாடல்களை அவர் பாடியுள்ளார். பல இசையமைப்பாளர்களுக்காக பாடல்களை பாடியுள்ள ஜெயஸ்ரீ, குறிப்பாக ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் தொடர்ந்து பாடியுள்ளார்.
பாம்பே ஜெயஸ்ரீ அவ்வப்போது பல வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. இவருக்கு வெளிநாடுகளில் இருக்கும் ரசிகர் கூட்டம் ஏராளம். தற்போதும் அப்படி லண்டனில் நடக்கும் ஒரு இசை நிகழ்ச்சிக்காகத்தான் அவர் அங்கு சென்றிருந்தார்.