நெல்லை: நாங்குநேரி – மேலப்பாளையம் இடையே இன்று பிற்பகலில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. இதையொட்டி மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் இன்று பெங்களூரு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான ரயில் பாதையில் தற்போது சென்னை முதல் நெல்லை வரை இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. நெல்லை தொடங்கி நாகர்கோவில் வரையிலான 74 கிமீ ரயில் பாதையில் இரட்டை ரயில்பாதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதிலும் மேலப்பாளையம் முதல் நாங்குநேரி வரை இரட்டை ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்று விட்டன. இப்பணிகளை இன்று பெங்களூரு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுக்கூர் சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார்.
8.40 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் மூலம் நெல்லை வந்த அவர், மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ரயில் நிலையத்தில் உள்ள 4 தண்டவாளங்கள், மேற்கூரை, பிளாட்பார்ம் மற்றும் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்தார். பின்னர் அவரது தலைமையிலான திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் மேலப்பாளையத்தில் இருந்து டிராலியில் செங்குளம், நாங்குநேரி வரை இரட்டை ரயில்பாதை பணிகள், தண்டவாளங்களின் உறுதித்தன்மை, புதிய பாலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு மாலை 3 மணிக்கு நாங்குநேரி தொடங்கி மேலப்பாளையம் வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. புதிதாக அமைக்கப்பட்ட ரயில்பாதையில் ரயிலின் வேகத்தை அதிகாரிகள் கணக்கெடுக்கும் வகையில் இச்சோதனை ஓட்டம் நடக்கிறது. சோதனை ஓட்டம் நடக்கும் மாலை வேளையில் தண்டவாளங்களின் அருகிலோ அல்லது ரயில்வே கேட் அருகிலோ பொதுமக்கள் நடமாடக் கூடாது என ரயில்வே துறை எச்சரித்துள்ளது.