சேலத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வின்போது மாணவர்களை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதித்ததாக ஆடியோ வெளியான விவகாரத்தில், பதிவு எழுத்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வனவாசி அரசினர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் முதன்மை அலுவலராக ரவி என்பவரும், உதவியாளராக மேச்சேரி அரசு பள்ளி எழுத்தர் மகாலிங்கமும் நியமிக்கப்பட்டனர்.
கடந்த 21ம் தேதி பொருளியல் தேர்வின் போது, முதன்மை அலுவலர் ரவி மாணவர்களை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரவியும், மகாலிங்கமும் பேசிக் கொண்டதாக ஆடியோ ஒன்றும் வெளியானது.
அதனடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்திய சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அலட்சியம், கீழ்படியாமை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, எழுத்தர் மகாலிங்கத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஆனால், மாணவர்களை புத்தகத்தை பார்த்து தேர்வெழுத அனுமதித்ததாக ஒப்புக்கொண்ட, முதன்மை அலுவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.