புதுடெல்லி: நாடு முழுவதும் இந்த ஆண்டு 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. சமீபத்தில் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டன. திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. அதேபோல் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், கர்நாடகா உட்பட மற்ற மாநில தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னர் கட்சியை மேலும் பலப்படுத்த பாஜக மேலிடம் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக ராஜஸ்தான், பிஹார், டெல்லி, ஒடிசா ஆகிய 4 மாநில பாஜக தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று அறிவித்தார்.
ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக மக்களவை எம்.பி.யாக உள்ள சி.பி.ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். பிஹாரில் ஓபிசி தலைவரும் மேலவை உறுப்பினருமான சாம்ராட் சவுத்ரி மாநில பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒடிசாவுக்கு மாநில முன்னாள் அமைச்சர் மன்மோகன் சமால், டெல்லியில் பாஜக செயல் தலைவராக உள்ள வீரேந்திர சச்தேவா ஆகியோர் மாநில பாஜக தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிஹார் மாநில பாஜக.வில் சாம்ராட் சவுத்ரி (54) கடந்த 2018-ம் ஆண்டுதான் சேர்ந்தார். அதன்பிறகு அவர் கட்சியில் முக்கியமானவராக வளர்ந்துள்ளார். இவர், அரசியல் செல்வாக்குள்ள குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்தவர். பிஹார் பாஜக தலைவராக உள்ள மக்களவை எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்குப் பதில் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் எம்எல்ஏ சதீஷ் பூனியாவுக்குப் பதில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். பிராமண சமூகத்தை சேர்ந்த ஜோஷி, சத்தர்கர் மக்களவை எம்.பி.யாக 2-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறும்போது, ‘‘ராஜஸ்தான் உட்பட 4 மாநில பாஜக தலைவர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததால், புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என்றனர்.