புதுடெல்லி: புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி 14 எதிர்க்கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை செய்கிறது.
எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுவில், சிபிஐ, அமலாக்கத் துறை, போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை மட்டும் குறிவைத்து செயல்படுவதாகவும், பாஜகவில் இணையும் தலைவர்கள் மீதான வழக்குகள் அடிக்கடி கைவிடப்படுகிறது அல்லது முடித்துவைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், புலனாய்வு அமைப்புகளின் கைது நடவடிக்கைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நடவடிக்கைகளின் வழிகாட்டுதல்களையும் கேட்டுள்ளன.
எதிர்க்கட்சிகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தாக்கல் செய்த மனுவினை இரண்டு வாரங்களில் பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தெரிவித்தார்.
சிங்வி தனது மனுவில், ‘95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவே உள்ளன. கைது நடவடிக்கைக்கு முந்தைய, பிந்தைய வழிகாட்டுதல்களை நாங்கள் கேட்கிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ராஷ்டிரீய சமிதி, ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளன.
காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம், நான்கு ஆண்டுக்கு முந்தைய அவதூறு வழக்கு ஒன்றில் வியாழக்கிழமை 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளன.
எதிர்க்கட்சிகளின் இந்த ஒருங்கிணைப்பில் டெல்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால் முக்கிய பங்காற்றியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அதேபோல் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வியும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.