சேலம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு சீட்லெஸ் திராட்சை வரத்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி, ஜர்த், மிர்சேஜ், பண்டரிபூர், சோலாப்பூர், கோலாப்பூர், மணிராஜா உள்ளிட்ட பகுதிகளில் சீட்லெஸ் (விதை இல்லாத) திராட்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் திராட்சை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது மகாராஷ்டிரா பகுதிகளில் சீட்லெஸ் திராட்சை அமோக விளைச்சலை தந்துள்ளது. விவசாயிகள் அறுவடை செய்யும் திராட்சையை இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், சேலம் மார்க்கெட்டுக்கு சீட்லெஸ் திராட்சையின் வரத்து அதிகரிப்பால் விற்பனை களைகட்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சேலம் கடைவீதி பழ வியாபாரிகள் கூறுகையில்,‘‘ மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 200 கிலோமீட்டர் சுற்று அளவில் தான் சீட்லெஸ் திராட்சை சாகுபடி நடக்கிறது. அங்கிருந்து தான் நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சீட்லெஸ் திராட்சை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த இரண்டு மாதமாக மகாராஷ்டிராவில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு சீட்லெஸ் திராட்சை வரத்து அதிகரித்துள்ளது. சீசன் தொடக்கத்தில் பத்து டன்னாக இருந்தது. இவை மெல்ல, மெல்ல அதிகரித்து, தற்போது நாள் ஒன்றுக்கு 50 டன் சீட்லெஸ் திராட்சை விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒன்றரை மாதத்திற்கு சீட்லெஸ் திராட்சையின் வரத்து இருக்கும். ஒரு கிலோ ₹40 முதல் ₹50 என விற்பனை செய்யப்படுகிறது, என்றனர்.