குன்னூர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டுக்குட்பட்ட பகுதியில் அண்ணா நகர் உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதிக்கு செல்லும் பாதையானது கொடநாடு எஸ்டேட் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், பொதுமக்கள் சென்று வர கடும் கட்டுப்பாடுகள் இன்று வரை இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக எஸ்டேட் தரப்புக்கும், பொதுமக்களுக்கும் இடையில் வழி சம்பந்தமான பிரச்னை இருந்து வருகிறது. இதுதொடர்பாக, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 20.9.2007ம் ஆண்டு நடந்த விசாரணையில் கொடநாடு எஸ்டேட் தரப்பில் இளங்கோவன் வழக்கறிஞராக ஆஜராகி வாதாடினார்.
அப்போது, விசாரணையில் பதிவு செய்து கொண்டிருந்த சாட்சியின் வாக்குமூலத்தை வழக்கறிஞர் இளங்கோவன் கிழித்தெறிந்ததாக அவர் மீது குன்னூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்து. இதையடுத்து இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தார். அதன்பின்பு வழக்கு விசாரணை தொடர்ந்து குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த சூழ்நிலையில் தனது தரப்பில் தானே ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் சுமார் 16 ஆண்டு கழித்து வழக்கறிஞர் இளங்கோவனை குன்னூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டார்.