ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நேற்று (மார்ச் 23) சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேரவையில் பேசினார். அதில், “மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன்! இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து, இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையோடுதான் எனது உரையை நான் தொடங்குகிறேன்.
சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 17 லட்சம் ரூபாய் வரை இழந்து, அந்தக் கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்துக்கு முன்னால் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு, இறந்து போயிருக்கிறார். ”தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளுக்கு நாள் இந்த மரணங்கள் நம்முடைய கண்ணுக்கு முன்னால் நடக்கின்றன. இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சட்டத்தைக் கையில் வைத்திருக்கக்கூடிய இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை உணர்ந்துதான், இணையவழி சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கே. சந்துரு தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைத்தோம். அரசின் சார்பில் அமைக்கப்பட்ட இக்குழு 27-6-2022 அன்று தனது அறிக்கையினை என்னிடம் வழங்கியது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவைக் குழுவின் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இணையதள விளையாட்டைத் தடுப்பது தொடர்பாக அரசால் இயற்றப்பட்ட, உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள், இணையவழி விளையாட்டுத் தொழில் நிறுவனர்கள் ஆகியோரிடம் 7-8-2022 அன்று கருத்துகள் கேட்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், பள்ளிக் கல்வித் துறையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையிலும், இணையதள விளையாட்டு உரிமையாளர்கள் மற்றும் இதர தரப்பினரிடையே நடத்தப்பட்ட ஆலோசனையின்படியும், பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 26-9-2022 அன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்டம், 2022, கவர்னரால் அக்டோபர் 1, 2022 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. இது தமிழ்நாடு அரசின் அரசிதழின் பகுதி IV, பிரிவு2-ல் அக்டோபர் 3, 2022-ல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு, மேற்கண்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக ஒரு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டது. அதற்கு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு, 2022 என்று பெயர்.
தமிழ்நாடு சட்டமுன்வடிவு எண்.53/2022 என்ற இந்தச் சட்டமானது கடந்த 19-10-2022 அன்று சட்டப்பேரவையில் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு, கவரனரின் ஒப்புதலுக்காக 26-10-2022 அன்று சட்டத் துறையால் அனுப்பப்பட்டது. இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் 23-11-2022 அன்று சில விளக்கங்களைக் கேட்டிருந்தார். இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட அமைச்சரும் 1-12-2022 அன்று கவர்னரை நேரில் சந்தித்து மீண்டும் விளக்கத்தை அளித்தார்.
ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை 131 நாட்கள் கழித்து, சில குறிப்புகளுடன் 6-3-2023 அன்று சட்டப்பேரவைத் தலைவருக்கு, கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார். கவர்னர் எழுப்பியுள்ள கேள்விகளும், அதற்கான பதில்களும் அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு, சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் பரிசீலனைக்கு வைக்கும் கருத்துருவானது அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவானது உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இதனை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மாநிலத்தின் ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும், காக்கவும் மாநில அரசுக்கு உரிமை உண்டு, மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு அந்த உரிமை உண்டு. மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு, 21-3-2023 அன்று பதில் அளிக்கையில், பந்தயம் மற்றும் சூதாட்டமானது, அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப் பட்டியலின் 34-வது பிரிவில் இடம் பெற்றுள்ளதால் இது தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறதென்று மிகத் தெளிவாக பாராளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.
மனச்சாட்சியை உறங்கச் செய்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதை பிரகடனமாகவே இந்த மாமன்றத்தில் தெரிவிக்க நான் விரும்புகிறேன். எந்தச் சட்டத்தின் நோக்கமும் மக்கள் நலன் மட்டும்தான். மக்களைக் காப்பது ஒன்றே சட்டத்தினுடைய கடமை ஆகும். தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு, 2022 இம்மாமன்ற உறுப்பினர்கள் முன் வைக்கப்படுகிறது. இனியொரு உயிர் பறிக்கப்படாமல்; இனியொரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல்; இனியொரு நாள்கூட இந்த ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் இந்தச் சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு முதல்வர் பேசினார்.