புதுடெல்லி: காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 65 முதியவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் பஞ்சாபில் உள்ள பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1988-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு 34 ஆண்டுகள் கழித்து அதாவது கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நவ்ஜோத் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், நவ்ஜோத் கவுருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. இன்வேசிவ் கேன்சர் எனப்படும் ஊடுருவும் புற்றுநோய் பாதிப்பின் 2-வது கட்டத்தில் அவர் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனக்கு ஏற்பட்ட நோய் பாதிப்பு குறித்து சிறையில் உள்ள தனது கணவருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
நவ்ஜோத் கவுர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “நவ்ஜோத் சிங் சித்து செய்யாத குற்றத்துக்காக சிறையில் அடைபட்டு இருக்கிறார். எனவே, இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் மன்னியுங்கள். உண்மை மிகவும் சக்திவாய்ந்தது. அது அவரை சோதனைகளில் இருந்து மீட்டெடுக்கும்.
உங்களுக்காக காத்திருக்க முடியாது. ஏனெனில், புற்றுநோயின் இரண்டாவது கட்ட பாதிப்பில் நான் உள்ளேன். தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. இதற்கு, யாரையும் குறை சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில், இவை அனைத்தும் கடவுளின் செயல். சரியானது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வெளியிட்ட பதிவில், “அதிருஷ்டவசமாக சரியான நேரத்தில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.