மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசினார் என்று குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில், விசாரணை என்ற பெயரில் போலி நாடகம் நடத்தி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியைக் குழிதோண்டிப் புதைத்த செயலாகும். இதைக் காரணம் காட்டி, 24 மணி நேரத்திற்குள், ராகுல்காந்தி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை நீக்கிவிட்டதாக மக்களவையில் மிருகத்தனமாக பெரும்பான்மை கொண்டிருக்கின்ற ஆணவத்தில் பா.ஜ.க. இந்த அக்கிரமச் செயலைச் செய்திருக்கிறது.
ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய நாசிசத்தைப் போல, இத்தாலியில் முசோலினி நடத்திய பாசிசத்தைப் போல, உகண்டாவில் இடிஅமீன் நடத்திய கொடுங்கோல் ஆட்சியைப் போல, நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது. விநாசகால விபரீத புத்தி என்று கூறுவதற்கு ஏற்ப இந்தத் தகுதி நீக்கத்தை செய்திருக்கிறது.
இரண்டு ஆண்டுகள் தண்டனை என்று சொன்னாலும், பிணையில் வருவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை நீதிமன்றமே தந்திருக்கிறது. நாட்டு மக்கள் இதற்கெல்லாம் சேர்த்து நரேந்திர மோடி அரசுக்கு தண்டனை கொடுப்பார்கள் என வைக்கோ கூறினார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் “மோடி” என்ற துணை பெயரை குறிப்பிட்டு ஒரு இந்த பெயர் கொண்டவர்கள் எல்லாம் என்று கூறி, ஒரு சமூகத்தை இழிவு படுத்திய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனது. மார்ச் 23 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் ராகுல் காந்தி. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த விஷயம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.