புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் முறையிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டார். “இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். நீதித் துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று ராகுல் காந்தியின் வழக்கறிஞர் பாபு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக மட்டுமில்லாமல் அரசியல் ரீதியாகவும் கையாள காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் டெல்லி இல்லத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் நோக்கி இன்று (வெள்ளிக்கிழமை) ஊர்வலமாகச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், குடியரசுத் தலைவரைச் சந்தித்து அவரிடம் மனு அளிக்கவும் திட்டமிடப்பட்டு, இதற்காக குடியரசுத் தலைவரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் திங்கள்கிழமை அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘பழிவாங்குவது, அச்சுறுத்துவது, மிரட்டுவது என்று மோடி அரசு செயல்படுகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு’ என குற்றம்சாட்டினார். | | வாசிக்க > பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை | முழு விவரம்