புதுடெல்லி: ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது சரியான நடவடிக்கையே என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இது நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஒவ்வொருவரும் இதனை ஏற்கத்தான் வேண்டும். ராகுல் காந்தி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் காலங்களில் சமூகங்களை சிலர் இழிபடுத்துகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அந்த வகையில், இந்தத் தீர்ப்பு நாடு முழுவதற்கும் ஒரு நல்ல செய்தியை கொடுத்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான புபேந்தர் யாதவ், ”ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படி திருடர்கள் என ராகுல் காந்தி கூறலாம்? பேச்சு சுதந்திரம் என்பது எந்த சமூகத்தையும் அவமதிப்பதற்கான உரிமை அல்ல. ராகுல் காந்தி ஓபிசி சமூகத்தை அவமதித்திருக்கிறார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்கவும் இல்லை. வெளிநாடு சென்றபோதும் அங்கு நாட்டுக்கு அவப்பெயெரை ஏற்படுத்தி உள்ளார்” என குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான், ”தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விளைவுகளை அனுபவித்தே தீர வேண்டும். ராகுல் காந்தி என்ன செய்தாரோ அதற்கான விளைவுகளை தற்போது அவர் அனுபவிக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.