வயநாடு மக்களவை தொகுதி
காங்கிரஸ்
எம்.பியாக இருந்தவர் ராகுல் காந்தி. இவர் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பேசிய விஷயம் சர்ச்சையாக மாறியது. அதாவது, மோசடி பேர் வழிகள் அனைவரும் மோடி என்ற பெயரை பின்னால் வைத்திருக்கிறார்களே. அதெப்படி? என்பது போல் கேள்வி எழுப்பியிருந்தார். இது பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் இருந்ததாக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அவதூறு வழக்கு
ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலத்தை சேர்ந்த புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 504ன் கீழ் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப் படுகிறார். அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
சூரத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அதேசமயம் ஜாமீன் வழங்கி மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் ரயில் மறியல், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என காங்கிரஸ் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.
மேல்முறையீடு செய்ய அவகாசம்
அவதூறு வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரிக்கப்படும் வரை நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி வர மாட்டார் எனக் கூறப்பட்டது. இந்த சூழலில் ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து நீக்கி மக்களவை செயலகம் இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
எம்.பி பதவி நீக்கம்
அடுத்தகட்டமாக மேல்முறையீடு செய்து தான் குற்றமற்றவர் என ராகுல் காந்தி நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் சிறைக்கு செல்ல வேண்டும். ஒருவேளை மேல்முறையீடு செய்து தண்டனை நீக்கப்படும் பட்சத்தில் மீண்டும் எம்.பி பதவி திரும்ப கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் மற்றொரு சிக்கலான விஷயமும் இருக்கிறது.
சட்டம் சொல்வது என்ன?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஏதாவது ஒரு வழக்கில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார். அதுமட்டுமின்றி அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே ராகுல் காந்தியை பழிவாங்கும் வகையில் பாஜக அரசு நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தகுதி நீக்கத்தில் இருந்து 3 மாதங்கள் சலுகை பெறும் நடைமுறையும் கடந்த 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு விட்டது. இதனால் மக்கள் பிரதிநிதிகள் தண்டனை பெற்றால் உடனே அவர்களது எம்.பி அல்லது எம்.எல்.ஏக்களின் பதவி ரத்தாகும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.